×

ஆண்டிபட்டி பகுதியில் கண்மாய், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை

*விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி கிராம பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்கள், நீர்வரத்து ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். கோடை மழை துவங்குமுன் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் பணிகள்எப்போது துவங்கும் என எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை மற்றும் பூ வகைகளில் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பல்வேறு பூ ரகங்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர மானாவாரி பயிர் சாகுபடியும் நடைபெறுகிறது.

இந்தப் பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்த பகுதியில் ஆசாரிப்பட்டி கண்மாய், கன்னியப்பபிள்ளைபட்டி, வரதராஜபுரம் கண்மாய், அதிகாரி கண்மாய், செங்குளம், கருங்குளம் கண்மாய், மும்மூர்த்தி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், கோவில்பட்டி கண்மாய், ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

முற்காலத்தில் வேலப்பர் கோவில் மலைப்பகுதியில் இருந்து ஓடைகள் வெட்டப்பட்டு நாகலாறு ஓடை வழியாக கண்மாய்களில் வந்து தண்ணீர் சேரும் வகையில் பாசன அமைப்பு இருந்தது இதே போல ஏத்தக்கோவில் மலைப்பகுதியில் இருந்து ஓடை அமைக்கப்பட்டு அந்த வழியில் நீரை தேக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது. பொதுவாக ஆண்டிபட்டி மழைமறைவு பகுதியாக இருப்பதாலும், பல ஆண்டுகளாக ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாமல் இருந்ததால் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. இதனால் மானாவாரி விவசாயத்தையும் தயக்கத்துடனேயே மேற்கொள்ளும் நிலை உள்ளது.

முல்லைப் பெரியாறு, வைகை உள்ளிட்ட முக்கிய ஆறுகள் சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது. தலைமடையில் இருக்கும் வைகை அணை ஐந்து மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய பங்களித்து வருகிறது. ஆனால் ஆண்டிபட்டி அருகே வைகை அணை இருந்தும் பாசன வசதி இல்லாத நிலை உள்ளது. திப்புரவு அணை திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தால் பயன் கிடைக்கும் என இந்தப் பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கண்மாய்களும், குளங்களும் உள்ளன. மேலும் 100க்கும் மேற்பட்ட கிணறுகளும் உள்ளன. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிராமப் பகுதிகளிலும் கடந்த பருவ மழை காலத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால் கண்மாய் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், தூர்வாரப்படாததாலும் நீர்வரத்து ஏற்படவில்லை. அதனால் ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களிலும் ஒடைகளிலும் நீர்வரத்து ஏற்படவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டமும், இறவை பாசனமும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஆண்டிபட்டி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. கண்மாய், ஓடைகளில் நீர்வரத்து இல்லாததால் கால்நடை வளர்ப்பு தொழிலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களில் கால்நடை வளர்ப்பு பாதியாக குறைந்துள்ளது. குறிப்பாக கன்னியப்பபிள்ளைபட்டி, கொத்தப்பட்டி, வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது தண்ணீர் இல்லாததால் 2 ஆயிரத்திற்கும் குறைவான ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு கை கொடுக்காததால் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கண்மாய்கள், ஓடைகள் வறண்டு காணப்பட்டது. பின்னர் வடகிழக்கு பருவமழை ஓரளவு கை கொடுத்தது. ஆனாலும் கண்மாய் ஓடைகளில் நீர்வரத்து ஏற்படவில்லை.‌ தற்போது தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் தொடங்குவதற்கு‌‌ முன்பே‌‌ வெயில் அதிகரித்துள்ளது.‌ எனவே கோடை காலத்தில் வெயில் மேலும் அதிகரிக்கலாம் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

கோடை காலத்தில் அதிகமான வெயில் இருக்கும் போது கோடை மழை பெய்யக்கூடும். எனவே கோடை மழை மற்றும் பருவமழை தொடங்குவதற்கு முன் கண்மாய்கள், ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி கண்மாய், ஓடைகளில் தடையின்றி நீர் வரத்து இருக்கும் படி தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் மாவட்ட நிர்வாகத்தை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

The post ஆண்டிபட்டி பகுதியில் கண்மாய், ஓடைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Antipatti ,Andipathi ,Dinakaran ,
× RELATED விஷம் குடித்து முதியவர் தற்கொலை